'டோர் டெலிவரி' செய்யலாமே...!!! மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!!

 
நாடு முழுவதும் அமலில் இருந்த பொதுமுடக்கம் மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மே 3 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கை நீட்டித்தபோது பல்வேறு தளர்வுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அவற்றில் முக்கிய அம்சமாக மதுக்கடைகள், பீடா கடைகளை திறக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து. டெல்லி, கர்நாடகம்., ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மதுபான விற்பனை கடைகள் திறக்கப்பட்டு சரக்கு விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மதுபானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குருசாமி நடராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், " கொரோனா வைரஸ் பரவல் தடுப்பின் முக்கிய அம்சமாக பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து கூறி வருகின்றன. 


ஆனால், தற்போது பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான "குடிமகன்"கள் மதுப்பான கடைகள் முன் குவிவதால் சமூக இடைவெளி கேள்விக்குறியாகிறது.

மதுக்கடைகளை திறந்துள்ளதன் மூலம், பொதுமக்களின் உயிருடன் அரசாங்கமே விளையாடக் கூடாது. எனவே, மதுபான கடைகளை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வின் முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "பொது இடங்களில் சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில், மதுபானங்களை, மதுப்பிரியர்களின் வீடுகளுக்கே சென்று வழங்குவது. ஆன்-லைனில் மதுப்பானங்களை விற்பது போன்ற வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து மாநில அரசுகள் யோசித்து முடிவெடுக்க வேண்டும்" என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

ஆனாலும், இந்த வழக்கில் உத்தரவு எதையும் பிறப்பித்த நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

From around the web