மாநகராட்சி மக்களுக்கு காய்கறிகள் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும் - ஜி. கே. வாசன்

 
தமிழக அரசு மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருவது படிப்படியாக பயன் தருகிறது. 

அந்த வகையில் சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்பட்ட நோய் தோற்று பரவலை தடுக்கும் விதமாக மார்க்கெட்டை திருமழிசையில் மாற்ற முடிவு செய்திருப்பதும் பயன் தரும். 

கோயம்பேடு மார்க்கெட்டின் மூலம் வியாபாரிகள், தொழிலாளர்கள், காய்கறி வாங்க சென்ற மக்கள் ஆகியோரில் சிலருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இதை அடுத்து மார்க்கெட்டில் மொத்த விற்பனை நிறுத்தப்பட்டு, காய்கறி சந்தை மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி கோயம்பேடு காய்கறி மார்க்கெட் திருமழிசையில் செயல்படுவதற்கு வியாபாரிகளுடம் ஆலோசித்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

கோயம்பேடு மார்க்கெட் என்பது தமிழகத்திலேயே மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் மட்டுமல்ல சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு அனைத்து விதமான காய்கறிகளை வழங்கும் மிக முக்கியமான சந்தையாகும். 

இந்நிலையில் கோயம்பேட்டில் இருக்கும் மார்க்கெட்டை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக திருமழிசையில் மாற்றக்கூடிய அவசர, அவசிய தேவை தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் சில மாதங்களுக்கு மட்டுமே என்றாலும் கூட வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். 

மேலும் இந்த புதிய இடத்தில் சுத்தம், சுகாதாரம் பேணப்படுகிறதா, சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து பார்வையிடுவதோடு காய்கறிகள் நியாயமான விலையில் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

எனவே கோயம்பேடு மார்க்கெட் சில மாதங்களுக்கு திருமழிசைக்கு இடமாற்றம் செய்யப்பட இருப்பதால் இடைப்பட்ட இக்காலத்தில் சென்னை மாநகராட்சி மக்களுக்கு தட்டுப்பாடில்லாமல் நாள்தோறும் காய்கறிகள் நியாயமான விலையில் கிடைப்பதை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் முன்னேற்பாடான நடவடிக்கைகளை எடுத்து உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

From around the web