இந்தியாவில் ஜுலை மாதம் உச்சத்தை எட்டும்...கொரோனா.. WHO எச்சரிக்கை

 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவுதான்; ஜுலை மாதம் உச்சத்தை எட்டும் என WHO எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா விரைவாகச் செயல்பட்டதால் குறைந்த அளவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கை நீக்கும் போது அதிக பாதிப்புகள் இருக்கும், மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் கூறியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு மே மாதத்தில் உச்சத்தை எட்டி பின்னர் படிப்படியாக குறையும் என்று நிபுணர்கள் முன்பு கணித்து இருந்தனர். ஆனால், ஜூலை மாதம்தான் உச்சத்தை எட்டி பின்னர் குறையும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதாக தெரிந்தாலும் இந்தியாவில் மக்கள் தொகையை ஒப்பிடும் போது, இது குறைவான எண்ணிக்கையாகவே கருதப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ கூறியதாவது; இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் விரைவாக செயல்பட்டதால் தற்போது ஒரு கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது. இந்தியாவில் மக்கள் நெருக்கமாக வாழ்வதால் அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது. 

ஆனாலும், இதன் பரவல் குறைந்து வருகிறது. நோய் பரவல் இருமடங்கு ஆவது 11 நாட்களாக இருக்கிறது. பொது முடக்கம் காரணமாக நோயை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் சுருக்கி விட்டார்கள். மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி, தமிழ்நாடு ஆகியவற்றில் சில நகரங்களில்தான் நோய் அதிகமாக இருக்கிறது.

பொது முடக்கத்தை நீக்கும் போது, நோய் பரவல் தன்மை வெடிப்பாக மாறும். ஆனால், அதை கட்டுப்படுத்தி விடலாம். இந்தியாவை பொறுத்த வரை ஜூலை மாதம் இறுதியில் இதன் தாக்கம் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கிறோம். 

அதன் பிறகு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். வயதானவர்களை கொண்ட நாடுகளில் அதிக உயிர் இழப்பு உள்ளது. இந்தியாவை பொறுத்த வரையில் பல வயது வரையரையிலேயே மக்கள் இருக்கிறார்கள். இதனால் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. 

இந்தியாவில் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால் நோய் பரவுதல் வேகமாக இல்லை. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் நோய் குறைவாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

From around the web