அனைத்து வரியையும் ரத்து செய்யக்கோரி... முதல்வர் தனிப்பிரிவுக்கு மனுக்கள்..

 


ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் இருந்து முதல்வர் தனிப்பிரிவுக்கு மனுக்கள் குவியத் தொடங்கியுள்ளன.

கொரோனா பாதிப்பு தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஊரடங்கு அமலில் உள்ளதால் மின் ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து மின் அளவீடு செய்யும் பணிகளை மேற்கொள்ளவில்லை. மாறாக பொதுமக்கள் கடந்த முறை (பிப்ரவரியில்) செலுத்திய மின்சார கட்டணத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மின்சார வாரியத்தின் இந்த நடவடிக்கையால் 80 சதவீத மக்கள், இனி அடுத்து எடுக்க உள்ள அளவீட்டிற்கு பிறகு கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடும்.

வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இது பெரும் சுமையாகும். தொழிசாலைகள் வணிக நிறுவனங்களுக்கான அளவீட்டை அவர்களே எடுத்து, மின்சார வாரியத்திற்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இது போன்ற நடைமுறையை வீடுகளுக்கும் பயன்படுத்த வேண்டும் அல்லது இரண்டு மாதங்கள் விலையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மார்ச் 31-க்குள் மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றிற்கு 3 மாதம் அவகாசம் அளித்து, அதாவது ஜூன் 30- ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலிகள், ஒப்பந்தத் தொழிலாளார்கள் உள்ளிட்ட பலர் வேலையிழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பரங்கிப்பேட்டை சேர்ந்த கலீல் என்பவர், சொத்து வரி, குடிநீர் வரி, மற்றும் மின்சார கட்டணத்தை 6 மாதங்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியுள்ளார். இவர் மட்டுமல்லாமல் இவரை போலவே தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் தனிப்பிரிவுக்கு மனுக்களை அனுப்பி வருகின்றனர்.

From around the web