Thursday, May 7, 2020

மே.இ. தீவுகள் அணி பலமானது: பிராவோ



2016-ல் டி20 உலக சாம்பியனை வென்ற அணியை விடவும் தற்போதைய மே.இ. தீவுகள் அணி பலமானது என ஆல்ரவுண்டர் பிராவோ கூறியுள்ளார்.
ஒரு பேட்டியில் பிராவோ கூறியதாவது:

இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ், அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டார். அதில் என்னுடைய பெயர் 9-வது இடத்தில் இருந்தது.

நான் அணி வீரர்களிடம் சொன்னேன், எந்தவொரு டி20 அணியிலும் நான் 9-வதாகக் களமிறங்கக் கூடிய நிலைமை இல்லை என்றேன். அணியின் பேட்டிங் திறமையைக் கண்டு வியக்கிறேன். 2016-ல் டி20 உலக சாம்பியனை வென்ற மே.இ. தீவுகள் அணியை விடவும் தற்போதைய மே.இ.தீவுகள் அணி பலமானது என்றேன். இது விளையாட்டல்ல. 10-வது வீரர் வரை பேட்டிங்கில் திறமையாக விளையாடுபவர்கள் உள்ளார்கள்.

மே.இ. தீவுகள் அணி முழு பலத்துடன் இருந்தால் எப்படியிருக்கும் என யோசித்துப் பாருங்கள். எவின் லூயிஸை ஆட்டமிழக்கச் செய்தால் ஹெட்மையர் வருவார். அவரை ஆட்டமிழக்கச் செய்தால் பூரான் வருவார். லெண்டில் சிம்மன்ஸை ஆட்டமிழக்கச் செய்தால் ரஸ்ஸல் களமிறங்குவார். அவரை ஆட்டமிழக்கச் செய்தால் பொலார்ட். அவரை ஆட்டமிழக்கச் செய்தால் ரோவ்மன் பவல். அப்படியே வந்துகொண்டே இருப்பார்கள். கடைசியில் பிராவோவையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.

இந்த பேட்டிங் வரிசை எந்த ஓர் அணியையும் அச்சுறுத்தும். இதுதான் இந்த அணி மீது அதிக ஆர்வத்தை உண்டாக்குகிறது என்றார்.

அக்டோபர் 2018-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் பிராவோ. எனினும் கடந்த டிசம்பர் மாதம் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற்றார். இதையடுத்து அயர்லாந்து, இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் விளையாடினார். கடைசி ஓவர்களில் அணியின் பந்துவீச்சைப் பலப்படுத்துவதற்காக பிராவோ சேர்க்கப்பட்டுள்ளார் என்று மே.இ. தீவுகள் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் ரோஜர் ஹார்பர் கூறினார். இதையடுத்து டி20 உலகக் கோப்பையில் பிராவோ விளையாடுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் மே.இ. தீவுகள் அணி உலகக் கோப்பையை வென்றபோது பிராவோவும் அந்த அணியில் இடம்பெற்றார்.

2004-ல் அறிமுகமான பிராவோ இதுவரை 40 டெஸ்டுகள், 164 ஒருநாள், 71 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Post Navi 
Share This

0 Comments: