Tuesday, June 30, 2020

பொதுமக்களிடம் அத்துமீறிய 80 காவலர்கள் இடைநீக்கம் : திருச்சி டிஐஜி உத்தரவு


பொதுமக்களிடம் அத்துமீறி நடந்ததாக புகார்களுக்கு உள்ளான திருச்சியை சேர்ந்த 80 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட டிஐஜி பாலகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் லாக் அப்பில் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதனை அடுத்து, சாத்தான்குளம் காவல்நிலையம் தொடர்பான பல செய்திகள் தொடர்ந்து வெளியாகியவண்ணம் உள்ளது.

தந்தை-மகன் உயிரிழப்பு விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

ஆனால், அந்த சம்பவம் குறித்து விசாரிக்க சென்ற மாஜிஸ்திரேட்டிற்கு ஒத்துழைப்பு தராமல் இருந்துள்ளனர் கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர். அதுமட்டுமல்லாமல், மகாராஜன் என்ற காவலர் மாஜிஸ்திரேட்டிடம் தகாத வார்த்தையில் பேசி ஒருமையில் திட்டியுள்ளார். அதனை அடுத்து, அந்த காவலரை மாவட்ட எஸ்.பி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து, காவலர்கள் பொதுமக்களை அவதூறாக பேசுவது மற்றும் தாக்குவது போன்ற வீடியோக்கள் இணையதளங்களில் வெளியானவண்ணம் உள்ளது. பொதுமக்களிடம் அவ்வாறு நடந்துகொள்ளும் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துவருகிறது.


இது ஒரு புறம் இருக்க, திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணனின் ஃபேஸ்புக் பதிவு தற்போது வைரலாகியுள்ளது. அதில், "திருச்சி காவல் வரம்பில் உள்ள 80 காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நடத்தை திருத்தம் தேவை. அவர்கள் நேரடி மக்கள் தொடர்பு சம்பந்தப்பட்ட கடமைகளில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள், பொதுமக்களுடன் அவர்கள் கையாளும் முறையை மேம்படுத்துவதற்காக அறிவாற்றல் நடத்தை சிகிச்சையான CBT (Cognitive Behavioural Therapy) முடித்து அதில் தேர்ச்சி பெற்ற பின்னரே அவர்கள் படிப்படியாக வழக்கமான கடமைகளில் மீண்டும் அமர்த்தப்படுவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி காவல் வரம்பில் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 80 காவலர்கள் மீது அம்மாவட்ட டிஐஜி நடவடிக்கை எடுத்திருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது. Source Asiaville Tamil


Post Navi 
Share This

0 Comments: