Sunday, June 28, 2020

புதுக்கோட்டையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிறுவன் மரணம்..??


தஞ்சாவூரில், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 13 வயது புதுக்கோட்டை மாவட்டச் சிறுவன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள பகட்டுவான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுவன். இவரது தந்தை நியாயவிலைக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறார்.

13 வயது சிறுவனுக்குத் தசை மற்றும் இணைப்பு திசு சிதைவு நோய் இருந்து வந்தது. இந்நிலையில் இச்சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், தஞ்சாவூர் வ.உ.சி. நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஜூன் 24-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இரவு உயிரிழந்தார்.

இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்தது: இச்சிறுவனுக்கு தசை மற்றும் இணைப்பு திசு சிதைவு நோய் பிறவியிலிருந்தே இருந்து வந்தது. மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இச்சிறுவன் சனிக்கிழமை அதிகாலை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இதய இயங்கு விசை 70 சதவீதம் இருக்க வேண்டிய நிலையில், 27 சதவீதம் மட்டுமே இருந்தது. இருப்பினும், இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிக்கிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அவரது இறப்புக்குத் தசை மற்றும் இணைப்புத் திசு சிதைவு நோயே காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Post Navi 
Share This

0 Comments: