Tuesday, June 30, 2020

மாஜிஸ்திரேட்டையே தரக்குறைவாகப் பேசிய விவகாரம் - முதல்வர் விளக்க வேண்டும்; தினகரன்


மாஜிஸ்திரேட்டையே தரக்குறைவாகப் பேசி மிரட்டும் துணிச்சலை காவல்துறைக்குக் கொடுத்தது யார் என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூன் 30) வெளியிட்ட அறிக்கை:

"சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் உடல்நலக் குறைவால்தான் உயிரிழந்தார்கள் என்று முதல்வர் கூறியிருந்த பின்னணியில், அந்தச் சம்பவத்திற்காக கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

அதே நேரத்தில் இது குறித்து விசாரிக்கச் சென்ற மாஜிஸ்திரேட்டையே ஒருமையில் மோசமாகப் பேசி மிரட்டும் அளவுக்கு கடைநிலை போலீஸ் காவலருக்கு துணிச்சல் கொடுத்தது யார்?

என்பதை தமிழக அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்.

சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜும், அவரது மகன் பென்னிக்ஸும் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தது அப்பட்டமாகத் தெரிகிற நிலையில், காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் பழனிசாமி, 'ஜெயராஜ் உடல்நலக் குறைவாலும், பென்னிக்ஸ் மூச்சுத்திணறலாலும் உயிரிழந்துள்ளனர்' என்ற அறிக்கை கொடுத்து, முதல் நாளில் இருந்தே அதனை மூடி மறைக்கிற வகையில் செயல்படுகிறாரோ என்ற மக்களின் சந்தேகம், இன்று நீதிமன்றத்தில் வெளியான அடுத்தடுத்த ஆதாரங்களால் மெய்யாகி உள்ளது.

முதல்வர் இப்படிப் பதற்றமாகச் செயல்பட்ட நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணை நடத்த சென்ற மாஜிஸ்திரேட் அளித்த அறிக்கை அனைத்துத் தரப்பினரையும் பெரும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

சாத்தான்குளம் காவல் நிலைய கடைநிலைக் காவலர் ஒருவர், மாஜிஸ்திரேட்டைப் பார்த்து ஒருமையில் கொச்சையான வார்த்தைகளில் பேசி மிரட்டியிருக்கிறார். அதுமட்டுமின்றி, விசாரணைக்காக மாஜிஸ்திரேட் கேட்ட ஆவணங்களையும், லத்தி போன்ற ஆதாரங்களையும் காவல்துறையினர் தர மறுத்திருக்கிறார்கள். அங்கு இருந்த தூத்துக்குடி ஏஎஸ்பி, சாத்தான்குளம் டிஎஸ்பி போன்ற காவல்துறை அதிகாரிகளும் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்திருக்கிறார்கள்.

உயர் நீதிமன்றம் நேரடியாகத் தலையிட்டிருக்கும் வழக்கிலேயே இப்படி பட்டவர்த்தனமாக காவல்துறையினர் அடாவடியாக செயல்படுவதன் பின்னணி என்ன? எந்தப் பின்புலமும் இல்லாமல், ஒரு காவலரால் மாஜிஸ்திரேட்டைப் பார்த்து இந்த அளவுக்குத் தரக்குறைவாகப் பேசிவிட முடியுமா? அவருக்கு அந்தத் துணிச்சலைக் கொடுத்தது யார்? இவர்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சம்பவத்தின் போது சாத்தான்குளத்தில் காவல் ஆய்வாளராக இருந்தவர் மீது ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் அவரையும் மற்றவர்களையும் காப்பாற்ற முயற்சிப்பது யார்?

ஜெயராஜையும் அவரது மகன் பென்னிக்ஸையும் விடிய விடிய காவல்நிலையத்தில் வைத்து அடித்திருக்கிறார்கள் என்று தலைமைக் காவலர் ரேவதி அளித்த வாக்குமூலமும், இருவருக்கும் அதிகமான காயங்கள் இருந்தது முதல்நிலை பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்திருப்பதும், முதல்வர் பச்சையாக பொய் சொல்லியிருக்கிறார் என்பதை நிரூபித்திருக்கின்றன.

காவல்துறை மற்றும் உளவுத்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் பழனிசாமி, இதெல்லாம் தெரிந்தும், இந்தக் கொடுஞ்செயலை மொத்தமாக மறைக்கும் வகையில் முந்திக்கொண்டு அறிக்கை கொடுத்தது ஏன்? மாஜிஸ்திரேட்டிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொண்ட காவலருக்கு மன அழுத்தம் இருப்பதாக அரசு சொன்னதைப் போல, அந்தத் துறையின் அமைச்சரான முதல்வரும் மன அழுத்தத்தில் இருக்கிறாரா?

மனசாட்சியுள்ள யாரையும் உலுக்கி எடுக்கும் சாத்தான்குளம் கொடூரத்தில் வெறுமனே பணியிட மாற்றங்களும், பணியிடை நீக்கம் போன்ற கண்துடைப்புகள் மட்டுமே இரண்டு உயிர்களைப் பறிகொடுத்திருக்கும் குடும்பத்தினருக்கு நீதி வழங்கிடாது. நீதிமன்றம் தெரிவித்திருப்பதைப் போல கொலை வழக்குப்பதிவு செய்து குற்றம் புரிந்தவர்களுக்கு விரைவில் தண்டனை தருவதுதானே சரியாக இருக்க முடியும்? அதுதானே காவல்துறையினருக்குக் களங்கம் ஏற்படுத்தும் இத்தகைய கரும்புள்ளிகள் இனியும் தோன்றாமல் இருப்பதற்கும், இது போன்ற கொடூரங்கள் எதிர்காலத்தில் தொடராமல் இருப்பதற்கும் வழி செய்யும்.

சாத்தான்குளம் வழக்கை தாமாக முன்வந்து கையிலெடுத்த உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணையைத் தொடங்கும் வரை தடயங்கள் அழிக்கப்படாமல் இருப்பதற்காக வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்திருக்கிறது. கொஞ்சமாவது நேர்மையும், மனசாட்சியும் இருந்திருந்தால் சாத்தான்குளம் சம்பவம் நடந்தவுடனே முதல்வரும், அரசாங்கமும் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுத்திருப்பார்கள். அப்படிச் செய்திருந்தால் உயர் நீதிமன்றமே தலையிட்டு இத்தகைய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்காது.

எனவே, இதன் பிறகாவது முதல்வர் பழனிசாமி குறைந்தபட்ச மனிதநேயத்தோடு செயல்பட்டு, நீதிபதிகள் அச்சம் தெரிவித்திருப்பதைப் போன்று தலைமைக் காவலர் ரேவதியின் வாக்குமூலத்தைக் காவல்துறையினர் அழிக்கவோ, மாற்றவோ இடம் கொடுக்காமல் இருப்பதற்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும். உயர் நீதிமன்றம் தொடர்ந்து இவ்வழக்கை கண்காணிக்கவிருப்பதாக கூறியிருப்பது ஆறுதல் அளிக்கிற நிலையில், சிபிஐ விசாரணை தொடங்கிய பிறகும் தங்களது நேரடிப் பார்வையில் வைத்திருந்து குற்றவாளிகளுக்கும், பின்னால் இருந்து அவர்களைக் காப்பாற்றத் துடிப்பவர்களுக்கும் உரிய தண்டனை வழங்கப்படுவதை உயர் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்".

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


Post Navi 
Share This

0 Comments: